புதுடெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின்னர், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மகளிர் இடஒதுக்கீடு அமலாக குறைந்தது 6 ஆண்டுகள் ஆகும் நிலை உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அவர் கூறும்போது,’ மக்களவையில் தற்போது 82 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அவர்கள் எண்ணிக்கை 181 ஆக உயரும்’ என்றார். நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. 

மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ததும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, மாநிலங்களவையில் நாளை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது பெரும்பாலான கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதால், மசோதா ஒரு மனதாக நிறைவேறுவது உறுதியாகி உள்ளது. இந்த மசோதாவுக்கு ‘நாரி சக்தி வந்தன் ஆதினியம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி அமலுக்கு வந்த 15 ஆண்டுகளுக்கு மகளிருக்கான இடஒதுக்கீடு தொடரும். 

இந்த 33 சதவீத இடஒதுக்கீடு இடங்களுக்குள் எஸ்சி/எஸ்டியினருக்கான ஒதுக்கீடும் அடங்கும். இதற்காக அரசியலமைப்பு பிரிவு 128வது திருத்தம் மசோதா 2023, துணை பட்டியல் மூலம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மசோதா 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நடைமுறைக்கு வராது என்று கூறப்படுகிறது. ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு இடஒதுக்கீடு எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்படும். இந்த மசோதாவின் படி ஒவ்வொரு எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நடைமுறைக்கு வருவதற்கு முன் பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்விவரம் வருமாறு: 

* மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் (128வது திருத்தம்) மசோதா சட்டமாக மாறியதும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 

* மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன் பின்னரே மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 

* நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறுவதற்கு குறைந்தபட்சம் 50 சதவீத மாநில சட்டபேரவைகளின் ஒப்புதல் பெற வேண்டும். 

* ஏனெனில் இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் என்பதால், மாநில சட்டசபைகளின் ஒப்புதல் அவசியம். 

* புதிய மசோதா அடிப்படையில் 2026 க்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எல்லை நிர்ணய செயல்முறை மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

* 2026க்குப் பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2031ல் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து தொகுதிகள் வரையறுத்தல் அல்லது மறுவடிவமைப்பு செய்யப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram