
சென்னை: சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம் புவி வட்டபாதையை வெற்றிகரமாக சுற்றிவந்து எல்1 லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த செப்.2ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதுவரை புவி வட்டபாதையில் சுற்றி வந்த ஆதித்யா விண்கலம் 4 சுற்றுகளை முடித்து 4வது கட்ட உயரம் அதிகரிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் விண்கலம் தனது அறிவியல் ஆராய்ச்சிகளை நேற்று முன் தினம் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 5வது முறையாக பூமியை சுற்றி முடித்த பின் தன் இலக்கை நோக்கி விண்கலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஐந்து சுற்றுகளை முடித்து எல்1 புள்ளியை நோக்கிய பாதையில் விண்கலத்தை செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக நடைப்பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு:சூரியன்-பூமி எல்1 நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. எல்1 லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கிய பாதையில் விண்கலத்தை செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது சூரியன்- பூமி எல்1 புள்ளிக்கு செல்லும் பாதையில் விண்கலம் உள்ளது. 110 நாட்கள் பயணத்திற்கு பின் விண்கலம் எல்1 லெக்ராஞ்சியன் பாயிண்ட்டை மையமாக கொண்ட ஒளிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். ஒரு பாதையில் உள்ள விண்கலத்தை மற்றொரு வானியல் பொருள் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு மாற்றுவதை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இஸ்ரோ வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.