
சென்னை: அதிமுக – பாஜ கூட்டணி உடைந்தது எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவருக்குமே வெற்றி ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. உண்மையில் தோல்வி, பிரதமர் மோடிக்குத்தான் என்று பாஜ தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக இன்று முதல் பாஜ கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி தலைமை அறிவித்த இந்த முடிவை வரவேற்று, அதிமுக கட்சி தொண்டர்கள் பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி உடைந்தது எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவருக்குமே வெற்றி ஏற்பட்டுள்ளதாகவே நிர்வாகிகள் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உண்மையில் தோல்வி, பிரதமர் மோடிக்குத்தான் என்றும் அவர்கள் கூறுகின்றனர். காரணம், தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக – பாஜ கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதனால், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இந்த கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெற முடியாது என்ற முடிவுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வந்துவிட்டார். இதுபற்றி கட்சியின் டெல்லி தலைமைக்கும் தெரிவித்து விட்டார்.
ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே கணிசமான இடங்களை பெற முடியும் என்று அண்ணாமலை கருதினார். அதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடியிடம் டெல்லி மேலிடம் மூலம் அண்ணாமலை பலமுறை தெரிவித்தார்.ஆனால், எடப்பாடி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காரணம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இந்த 3 பேரையும் அதிமுகவில் சேர்த்தால் தன்னால் சுயமாக முடிவு எடுக்க முடியாது. பழைய மாதிரி சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 95 சதவீத நிர்வாகிகளும் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அண்ணாமலையால் நினைத்ததை நிறைவேற்ற முடியவில்லை.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரிய வெற்றியாக கருதப்பட்டது. அதேபோன்று, டெல்லி பாஜ மேலிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை கையில் வைத்துக் கொண்டு தங்களை ஆட்டிப்படைக்க நினைத்தது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீதுள்ள ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு மற்றும் தங்கமணி, வேலுமணி, வீரமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு இருந்தது. இதனால் அவர்கள் மீது டெல்லி பாஜ நடவடிக்கை எடுக்கலாம் என்று அச்சம் இருந்தது. இதனால், அதிமுக – பாஜ கூட்டணி முறிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். இதனால், அண்ணாமலை பல இடங்களில் தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் பலரும் ஊழல் செய்துள்ளனர். அவர்களது சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறினார்.
ஒரு கூட்டணி கட்சியை மற்றொரு கூட்டணி கட்சி தலைவர் விமர்சித்து கூறுவதை அதிமுக தலைவர்கள் ஏற்கவில்லை. அதேநேரத்தில் 14 சீட் வேண்டும் என்று எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா தெரிவித்தார். அதோடு பாஜவுக்கு ஒதுக்கும் தொகுதியில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் ஆகியோருக்கு சீட் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். இது எடப்பாடிக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது.