
புதுடெல்லி: நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வழிவகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த மாதம் 31ம் தேதி அறிவித்தது.
சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பதை ஒன்றிய அரசு தெரிவிக்காததால், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அலுவல்கள் முறைப்படி மாற்றப்படுவதையொட்டி, 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடத்தவும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் உள்ளிட்ட 4 மசோதாக்கள் நிறைவேற்றவும் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால் அவசரமில்லாத இந்த மசோதாக்களை தாண்டி வேறு சில ரகசிய திட்டங்கள் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.
இந்நிலையில், பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வு நேற்று மாலை 6 மணிக்கு முடிந்த பிறகு, மாலை 6.30 மணி அளவில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அடுத்த 4 நாட்களில் சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வரப்படக் கூடிய முக்கிய மசோதாக்கள் குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடந்ததால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
வழக்கமாக கூட்டம் முடிந்ததும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் விளக்குவார்கள். ஆனால் நேற்றைய கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படவில்லை. கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டது. அதே சமயம், தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அம்மசோதாவை சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டு வர அரசு விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், மக்களவை தேர்தலை குறிவைத்து, நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழி செய்யும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மசோதா இன்றே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக மக்களவை கூட்டம் நேற்று காலையில் தொடங்கியதும், ‘75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள்’ என்ற தலைப்பில் பழைய நாடாளுமன்றத்திற்கு விடை தரும் விவாதம் நடந்தது.
இதில் பிரதமர் மோடி 52 நிமிடங்கள் ஆற்றிய உரையில் கூறியதாவது: இன்று நாம் இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் இருந்து விடைபெறுகிறோம். சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய சட்டமன்றமாக இருந்த இந்த கட்டிடம், சுதந்திரத்திற்குப் பின் நாடாளுமன்றமானது. இந்த கட்டிடத்தை ஆங்கிலேயர்கள் கட்டியிருக்கலாம். ஆனால் கட்டுமானத்திற்கான உழைப்பு, பணம் நம் நாட்டு மக்களுடையது என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். இந்த கட்டிடம் குறித்து நம் மனதில் பல நினைவுகள், உணர்வுகள் நிறைந்துள்ளன. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தூக்கத்தில் இருந்து எழுப்ப, பகத் சிங்கும், படுகேஷ்வர் தத்துடன் நாடாளுமன்றம் மீது துணிச்சலுடன் குண்டுகளை வீசினர். அந்த வெடிகுண்டின் சத்தம், நாட்டிற்கு நன்மை செய்ய விரும்புவோருக்கு இன்னும் தூக்கமில்லாத இரவுகளுடன் விழிப்புடன் வைத்துள்ளது.
இதே நாடாளுமன்றத்தில்தான் ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, பிவி. நரசிம்மராவ், அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற முன்னாள் பிரதமர்கள் தங்கள் தலைமையின் கீழ் தேசத்திற்கு புதிய திசையை காட்டினர். இங்கு, ஜவகர்லால் நேரு நள்ளிரவில் ஆற்றிய ‘விதியுடன் ஓர் ஒப்பந்தம்’ என்கிற உரை இன்றும் நம் அனைவரையும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே போல, ‘அரசாங்கங்கள் வரலாம் போகலாம், கட்சிகள் உருவாகலாம் கலையலாம். ஆனால் இந்த தேசம் வாழ வேண்டும்’ என்ற வாஜ்பாயின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன. இவ்வாறு ஜனநாயகத்திற்கு பெருமை சேர்த்த முன்னாள் பிரதமர்களை பாராட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது.