சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த 57 லட்சம் பேருக்கு ரூ.1000 உதவித்தொகை எதனால் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள இ-சேவை மையங்களில் பெண்கள் குவிந்தனர். இணையதளம் மூலமும் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த, மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை கடந்த 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த சுமார் 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று நேற்று முன்தினம் முதல் எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளது. இதுபோன்று, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் தகுதியுடையவராக இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, எஸ்எம்எஸ் வந்த 30 நாட்களுக்குள், தாலுகா அளவில் உள்ள உதவி மையங்களில் அல்லது இ-சேவை மையங்களில் ரூ.1000 கிடைக்க பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், ஆன்லைன் மூலம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்காதவர்கள் தங்களுடைய விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள இணையதளம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
https://kmut.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஓடிபி எண்ணை பதிவு செய்தால் என்ன காரணத்திற்காக பணம் வரவில்லை என்பதை மகளிர்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த காரணம் சரியானது இல்லை என்றால் மேல் முறையீடு செய்யலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர்ந்து மாதம் ரூ.1000 பெற முடியாத சுமார் 57 லட்சம் பேரில் பலருக்கு எஸ்எம்எஸ் நேற்று முன்தினம் முதல் வர தொடங்கியுள்ளது. இப்படி, எஸ்எம்எஸ் வந்தவர்கள் தாலுகா அலுவலகம், இ-சேவை மையம் மூலம் மீண்டும் நேற்று முதல் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினர்.
இதனால் இ-சேவை மையங்களில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழக அரசு வாய்ப்பளித்த நாட்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்கள், அதே நேரம் தகுதியுள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றி தமிழக அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
* இணையதளம் முடங்கியது
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்த சுமார் 57 லட்சம் பேர், தங்களின் விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள தமிழக அரசு நேற்று இணையதள முகவரியை ஒன்றை அறிவித்திருந்தது. நேற்று காலை முதல் அதிகம் பேர் இந்த இணையதளத்தை பயன்படுத்தினர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் இணையதளத்தை ஒப்பன் செய்ததால், இணையதள சேவை முடங்கியது. பின்னர் மாலை ஓரளவு சரியானது.