புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கான உரிய பங்கீட்டை தர வேண்டும் என கர்நாடகா அரசுக்கு வலுவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்களின் குழு, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கை பெற்று தர ஒன்றிய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முறையிடுவார்கள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார். இதன்படி தமிழ்நாட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பிக்கள் நேற்று ஒன்றிய அமைச்சரை டெல்லியில் நேற்று காலை சந்தித்தனர்.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு (திமுக), எஸ்.ஜோதிமணி (காங்கிரஸ்), மு.தம்பித்துரை மற்றும் என்.சந்திரசேகரன் (அதிமுக), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) பி.ஆர்.நடராசன் (மார்க்சிஸ்ட்), வைகோ (மதிமுக), தொல்.திருமாவளவன் (விசிக), அன்புமணி (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ் கனி (முஸ்லிம் லீக்) மற்றும் ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) ஆகிய 12 எம்பிக்கள் இடம் பெற்றிருந்தனர். அப்போது கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கிட வேண்டும். மேலும் கர்நாடகா அரசுக்கு இதுகுறித்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் செகாவத்திடம் மனு கொடுத்தனர்.
அப்போது ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், ‘‘கர்நாடகாவில் போதிய மழை இல்லை என்பதால் தண்ணீர் திறக்க முடியவில்லை என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் வரும் காலங்களில் அம்மாநிலத்தில் இருக்கும் மழையின் அளவீட்டை கணக்கிட்டு தமிழ்நாட்டிற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு, ஒன்றிய அரசு தரப்பில் அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார். அப்போது அதற்கு பதிலளித்த தமிழ்நாட்டு எம்பிக்கள் குழுவினர், ‘‘காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழ்நாட்டின் கோரிக்கையை அங்கு வாதங்களாக முன்வைத்துக் கொள்கிறோம்.
அதுவரையில் தற்போது உத்தரவிடப்பட்டுள்ள வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் என்பதை குறையாமல் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட கர்நாடகாவை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என கூறினர். இதையடுத்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவை பொறுத்தவரையில் அங்கிருக்கும் அணைகளில் 54 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு அவர்கள் தர மறுக்கின்றனர். மேலும் இருக்கும் நீரையும் புதிய படுகை அணைகளை கட்டி தடுத்துள்ளனர். இதில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி ஆணையத்தின் உத்தரவின் படி வினாடிக்கு 5000 கன அடி திறக்க வேண்டும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தும், கர்நாடகா அரசு அதனை பின்பற்றவில்லை.
மாறாக வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீரை மட்டுமே திறந்து வருகிறது. மேலும் நாங்கள் ஒன்றும் கர்நாடகாவில் இருக்கும் அனைத்து அணைகளில் இருக்கும் தண்ணீரையும் முழுமையாக கேட்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி எங்களுக்கான நீர் பங்கீட்டின் உரிமையை தான் கேட்கிறோம். மேலும் நீர் பங்கீட்டை கேட்கும் போதெல்லாம் எங்களது மாநிலத்தில் மழை இல்லை, குடிநீர் பிரச்னை உள்ளது என கர்நாடகா அரசு தொடர்ந்து காரணம் கூறி வருகிறது.
இதில் தமிழகத்தில் இருக்கும் விவசாயிகளின் நிலைமை மற்றும் காவிரி நீரை குடிநீராக பயன்படுத்தும் பொதுமக்களின் வாழ்வாதாரம் ஆகிய அனைத்தையும் ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் ஒரு வலுவான உத்தரவை கர்நாடகா அரசுக்கு பிறப்பிக்க வேண்டும். மேலும் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் என்பது தமிழ்நாட்டுக்கு போதாது என்பதால், வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீரை திறக்க காவிரி ஆணையத்தின் மூலம் கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் தெரிவித்தோம். கோரிக்கை தொடர்பான மனுவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.