சென்னை: சென்னை பாண்டிபஜாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் மாலை வந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை விமானம் நிலையம் சென்றார். ஆளுநரை விட்டுவிட்டு பாதுகாப்பு வாகனம் திரும்பியது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. பாதுகாப்பு வாகனம் அண்ணாசாலையில் வந்து கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வாகனத்தின் முன்னால் கொடுங்கையூர் சேர்ந்த சையது இம்ரான்(37) என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். சையது இம்ரான் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் பாதுகாப்பு வாகனம் எதிர்பாராத வகையில் முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது பாதுகாப்பு வாகனத்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட போலீசார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதடைந்தது. இந்த விபத்தால் முன்னால் கார் ஓட்டி சென்ற சைபது இம்ரானுக்கும் போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ேநரில் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர்.