
அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் வியூகத்தைதான், மேலிட பாஜக, எடுத்து வருவதாக தெரிகிறது, காரணம் விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. எப்படியும் 3வது அணி உருவாகிவிடும் என்கிறார்கள்.. இது சாத்தியமா?
வெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி மட்டுமே சாத்தியமாகாது டிடிவி தினகரன், ஓபிஎஸ் இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு கூட்டணி வைக்க முடியுமா என்பதையும், அதிலும், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை போன்ற தொகுதிகளில் தினகரனுக்கான செல்வாக்கு இன்னமும் அப்படியே உள்ளதால், டிடிவி தினகரனை தவிர்த்துவிட்டு, கூட்டணி அமைக்க முடியாது என்பதையும் பாஜக மேலிடம் நன்கு அறிந்தே வைத்துள்ளதாம்.
எடப்பாடி பழனிசாமி: பிஜேபி அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும், தென்மண்டலங்களில் ஓபிஎஸ், தினகரனும், கொங்கு மண்டலத்தில் பாமகவும் முக்கியம் என்பதால், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை பாஜக, இனிவரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமியிடம் சற்று அழுத்தமாகவே வலியுறுத்தும் என்கிறார்கள். இதைத்தான், நயினார், பொன்.ராதா, வானதி சீனிவாசன் உட்பட பல மூத்த தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. ஆனால், மெகா கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து பல மாதங்கள் ஆகின்றன..
கூட்டணி முறிவு: கடந்த சில நாட்களாகவே இந்த வார்த்தை போர்கள், இப்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.. “கூட்டணியை முறிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார், அதிமுக வெற்றிபெற கூடாதென திமுகவின் கைக்கூலியாக பேசுகிறார்” என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.
“வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சிவி சண்முகத்துக்கு பதிலடி தந்துள்ளர்.
“20 சீட்டுக்களை பாஜகவுக்கு ஒதுக்கிவிடுங்கள், எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்” என்று எடப்பாடியிடம் வலியுறுத்தப்பட்ட நிலையில், அதற்கும் எடப்பாடி ஓகே சொல்லாமல் போக , அதனால், இந்த நிமிடம்வரை சுமூக முடிவு இரு தரப்பிலுமே எட்டப்படவில்லை என தெரிகிறது. தற்சமயம், அதிமுக – பாஜக தலைவர்களிடம் நடந்துவரும் கருத்து மோதலில், 3 அணியாக பாஜக உருவெடுத்துவிடும் என்கிறார்கள் விமர்சகர்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!