சென்னை: இந்தியாவை காப்பாற்றதான் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். இந்த ‘இந்தியா’ கூட்டணி, காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு சாதகமாக எதையும் செய்ய முடியவில்லை என்றால் , இந்த கூட்டணியில் தமிழ்நாட்டிற்கு என்ன பலன்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீரை கர்நாடகம் திறக்க, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது திமுகவின் நெருங்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நெருங்கிய நண்பர் சித்தராமையா தான் கர்நாடக முதலமைச்சராக இருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூர் சென்றால், விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்கும் அளவுக்கு மிகமிக நெருங்கிய நண்பரான சிவக்குமார் தான், கர்நாடக துணை முதலமைச்சராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவுக்கும், ‘இந்தியா’ கூட்டணி கட்சி கூட்டத்துக்கும் பெங்களூரு சென்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எல்லா முக்கிய பிரபலங்களை சந்தித்து அன்பை பொழிந்தவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போதெல்லாம் காவிரி பிரச்சனை பற்றி கவலைப்படாமல், இப்போது தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, உடனடியாக பெங்களூர் சென்று நெருங்கிய நண்பர்களான கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோரை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும்போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு முறையாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லாமல் துரோகம் தான் பரிசாக கிடைத்திருக்கிறது. இதுதான் திமுக ஆட்சி நடத்தும் லட்சணம்.
அதிகார பசிக்காக, அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுக்கும் திமுகவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோரை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும். தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறக்குமாறு கர்நாடக முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு உத்தரவிடுமாறு, சோனியா, ராகுலிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பிஜேபி ஆட்சியில் இருக்கும்போது தவறாமல் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது என்று வானதி ஸ்ரீனிவாசன் கூறியிருப்பது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவர் எழுப்பிய கேள்வி சரியானதுதான் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.