பல்லேகலே: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள ஆசிய கோப்பை தொடரின் 3வது லீக் ஆட்டம், இலங்கையின் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று நடைபெற உள்ளது. அதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தானுடன் மோதுகிறது. தொடக்க போட்டியில் நேபாள அணியை எளிதாக வீழ்த்தியதால் பாக். தரப்பு உற்சாகமாக உள்ளது. 

சமீபத்தில் நியூசிலாந்து, இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடர்களிலும் வெற்றிவாகை சூடிய அந்த அணி, தரவரிசையில் முதலிடத்தையும் வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நம்பர் 1 அந்தஸ்தை இழந்து 3வது இடத்துக்கு பின்தங்கியுள்ள இந்தியா, சற்று நெருக்கடியுடனேயே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. விரைவில் உலக கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற உள்ள நிலையில், இரு அணிகளுக்குமே இது முக்கியமான தொடராக உள்ளது. 2019 உலக கோப்பைக்கு பிறகு இந்த அணிகள் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் மோத உள்ளன. 

புதிய, இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணிக்கு, பாக். பந்துவீச்சாளர்கள் ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ராவுப் சவாலாக இருப்பார்கள். பும்ரா முழு உடல்தகுதியுடன் அணிக்கு திரும்பியுள்ளது, இந்திய பந்துவீச்சு கூட்டணிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் 4-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது, இந்திய வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புள்ளிவிவரம் என்பதில் சந்தேகமில்லை.வெற்றிக்காக இரு அணி வீரர்களும் மல்லுக்கட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. 

நேருக்கு நேர்… 

* இந்தியா-பாக். அணிகள் இதுவரை 132 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் பாக். 73 ஆட்டங்களிலும், இந்தியா 55 ஆட்டங்களிலும் வென்றுள்ளன (4 போட்டிகளில் முடிவு இல்லை). 

* இதற்கு முன் நடந்த 15 ஆசிய கோப்பை தொடர்களில், இரு அணிகளும் தலா 14ல் மட்டுமே பங்கேற்றுள்ளன. அவற்றில் இரு அணிகளும் 17 ஆட்டங்களில் மோதியதில் இந்தியா 9, பாகிஸ்தான் 6ல் வென்றுள்ளன. மீதி 2 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. 

* கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 2 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் 4 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram