அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், ஒன்றிணைந்து போட்டியிடுவது என இந்தியா கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை உடனடியாக துவக்குவது, பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. 

இக்கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவிலும் நடந்ததைத் தொடர்ந்து, 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரி, மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: இந்தியா கூட்டணி கட்சிகள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் கூடிய விரைவில் முடிக்கப்படும். பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். பல்வேறு மொழிகளில் ‘ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா’ என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தேர்தல் விவகாரங்கள் கவனிக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். 

அவர்களின் விவரம் வருமாறு: ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் உத்தி குழு: கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), மு.க.ஸ்டாலின் (திமுக) டி.ஆர்.பாலு (திமுக) சஞ்சய் ராவத் (உத்தவ் – சிவசேனா), தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரீய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்), ராகவ் சட்டா (ஆம் ஆத்மி கட்சி), ஜாவேத் அலி கான் (சமாஜ்வாடி கட்சி), லல்லன் சிங்(ஐக்கிய ஜனதா தளம்), ஹேமந்த் சோரன்(ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), டி.ராஜா(சி.பி.ஐ), உமர் அப்துல்லா(தேசிய மாநாட்டு கட்சி), மெஹபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் உள்ளது. ஆனால், இதன்சார்பில் இடம்பெறுபவர் யார் என்ற விவரம் பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்தியா கூட்டணி குழுவில் திமுக பிரதிநிதிகள் 
இந்தியா கூட்டணி குழுவில் திமுக பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு மற்றும் தேர்தல் வியூக குழுவில் டி.ஆர்.பாலு எம்பி, பிரசார குழுவில் திருச்சி சிவா எம்பி, சமூக ஊடகங்களுக்கான பணிக்குழுவில் தயாநிதி மாறன் எம்பி, ஊடகத்திற்கான பணிக்குழுவில் கனிமொழி எம்பி, ஆராய்ச்சிக்கான பணிக்குழுவில் ஆ.ராசா எம்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

* ‘ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா’ 
மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ ஆட்சியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்குடன், பாஜவுக்கு எதிரான ஒருமித்த கருத்துள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மும்பையில் 3வது கூட்டம் நடத்தியுள்ளன. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ‘ஒன்றுபடும் பாரதம், வெற்றிபெறும் இந்தியா’ என்ற கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram