பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பிலாஸ்பூரில் உள்ள பர்சாடா கிராமத்தில் நடந்த மாநில அரசின் வீடு கட்ட நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் அரசியலில் பங்கேற்பதை உறுதி செய்ய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுத்தது. இந்த அறிக்கை ஒன்றிய அரசிடம் உள்ளது. ஆனால் மோடி அரசு இந்த விவரங்களை ஏன் வெளியிடவில்லை? அவற்றை வெளியிட பிரதமர் பயப்படுகிறாரா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியினர் கேமராக்கள் முன் ரிமோட் கண்ட்ரோலை அழுத்தினால் விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் கிடைக்கிறது.ஆனால் பாஜ ரிமோட்டை அழுத்தும்போது, பொதுத் துறை தனியார்மயமாக்கப்படுகிறது. நீர், காடுகள் மற்றும் நிலம் அதானிக்கு செல்கிறது,” என்று கூறினார்.
ரயிலில் பயணித்த ராகுல்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பிலாஸ்பூரில் இருந்து ராய்பூருக்கு முதல்வர் பாகெல், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குமாரி செல்ஜா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜி மற்றும் மூத்த தலைவர்களுடன் ரயிலில் பயணித்தார். அப்போது பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடினார். சட்டீஸ்கரில் 2,600 ரயில்களை கடந்த சில மாதங்களில் ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் ஏற்கனவே சாட்டியிருந்தது.