புதுடெல்லி: சென்னையில் இருந்து நெல்லை, விஜயவாடா உட்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவாகவும், அனைத்து பகுதிகளிலும் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களுக்கு 9 வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. 

இந்த வந்தே பாரத் ரயில்கள், சென்னை – நெல்லை, சென்னை – – விஜயவாடா, உதய்பூர் – ஜெய்ப்பூர், ஐதராபாத் – பெங்களூரு, பாட்னா – ஹவுரா, காசர்கோடு – திருவனந்தபுரம், ரூர்கேலா – புவனேஸ்வர் – புரி, ராஞ்சி – ஹவுரா மற்றும் ஜாம்நகர் – அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் இவ்வழித்தடங்களில் பயண நேரம் 2 முதல் 2.5 மணி நேரம் வரை குறையும். டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி மூலம், புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கைக்குரிய சக பயணியாக ரயில்வே உள்ளது. நமது நாட்டில் ஒருநாளில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை, பல உலக நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். ரயில்வேயை நவீனமாக்குவதில் பாஜ அரசு கடினமாக உழைத்து வருகிறது. 

ஏற்கனவே நாடு முழுவதும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரும் நிலையில், தற்போது மேலும் 9 ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயிலின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை வந்தே பாரத்தில் 1.11 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் வந்தே பாரத் ரயில் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த வகையில், நாட்டின் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவாகவும், அனைத்து இடங்களிலும் நடந்து வருகின்றன. ரயில்வே மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நிகழும் மாற்றங்கள் வளர்ந்த இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இருக்கும் என நம்புகிறேன். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியும், ஒவ்வொரு மாநில மக்களின் வளர்ச்சியும் அவசியம். 

ரயில்வே அமைச்சரின் சொந்த மாநிலத்தில் ரயில்வே மேம்பாட்டு பணிகள் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற சுயநலச் சிந்தனை நாட்டை மிகவும் பாதித்துள்ளது. இப்போது எந்த மாநிலத்தையும் பின்தங்கிய நிலையில் வைத்திருக்க முடியாது. ‘அனைவருக்குமான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற பார்வையுடன் நாம் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடக்க விழாவை முன்னிட்டு, நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று பயணிகள் டிக்கெட் எடுத்து பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. 8 பெட்டிகளிலும் முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், ஒன்றிய அரசின் பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், ரயில்வே ஊழியர்கள், வங்கி மற்றும் தபால்துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் சென்னை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

இந்த ரயிலின் முதல் பயணம் என்பதால் தெற்கு ரயில்வே 12 இடங்களில் பயணிகள் வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வரும் 27ம் தேதி புதன்கிழமை முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் வழக்கமான இயக்கத்தை தொடங்குகிறது. அதன்படி தினமும் காலையில் 6 மணிக்கு நெல்லையில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், விருதுநகருக்கு காலை 7.13 மணிக்கும், மதுரைக்கு காலை 7.50 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு காலை 8.40 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.50 மணிக்கும், விழுப்புரத்திற்கு பகல் 12 மணிக்கும், தாம்பரத்திற்கு பிற்பகல் 1.13 மணிக்கும், சென்னை எழும்பூருக்கு பகல் 1.50 மணிக்கு போய் சேரும்.மறுமார்க்கமாக சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் (எண்.20631) மதியம் 2.50 மணிக்கு சென்னையில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை வந்தடையும். 

இந்த ரயில் தாம்பரத்திற்கு 3.13 மணிக்கும், விழுப்புரத்திற்கு பகல் 4.35 மணிக்கும், திருச்சிக்கு 6.40 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 7.56 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கும், விருதுநகருக்கு 9.13 மணிக்கும், நெல்லைக்கு 10.40 மணிக்கும் வந்து சேருகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக மதுரைக்கு தெற்கே நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயில்கள் தேவை என குரல் கொடுத்து வருகின்றனர். பயணிகளின் கனவு நனவாகும் வகையில் இன்று முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இதனால் தென்மாவட்ட மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

*பயணிகள் கருத்துப்படி புதிய அம்சங்கள் 
வந்தே பாரத் ரயில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, 9 புதிய வந்தே பாரத் ரயிலில் பயணத்தை மேலும் வசதியாக்கும் வகையில் புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் இருக்கை சாய்வு கோணம் 17.31 டிகிரியில் இருந்து 19.37 டிகிரியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சீட்டின் குஷன் கடினத்தன்மை மிருதுவாக்கப்பட்டுள்ளது. இருக்கையின் கீழ் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டை எளிதாக எட்டும்படி மாற்றப்பட்டுள்ளது. புட்ரெஸ்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

எக்சிகியூட்டிவ் கோச்சில் இருக்கைகளின் நிறம் சிவப்பிற்கு பதிலாக இனிமையான நீல நிறமாக மாற்றப்பட்டுள்ளது. வாஷ் பேஷின்களில் தண்ணீர் தெறிக்காமல் இருக்க அவை மேலும் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. கழிவறை விளக்குகள் 1.5 வாட் பல்புகளுக்கு பதில் 2.5 வாட் பல்புகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் தீ கண்டறிதல் அமைப்புகள், உலகத்தரம் வாய்ந்த கவாச் பாதுகாப்பு உபகரணம் உள்ளிட்டவை வந்தே பாரத் ரயிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

*ரயிலில் பயணித்த விஐபிக்கள் 
நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் மதுரை விமானத்தில் செல்வதற்காக மதுரை வரை பயணித்தார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி செல்லும் வகையில் பயணித்தார். நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும் அவர்களுடன் நேற்று சென்னைக்கு பயணித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram