
புதுடெல்லி: ‘ஜி20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா வழித்தடம் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடித்தளமாக பயனளிக்கும்’ என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’தில் நேற்று பேசியதாவது:
சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியனின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி உள்ளது. இந்த இரு சாதனைகள் பற்றிதான் இப்போது எனக்கு ஏராளமான கடிதங்களும், பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஜி20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை இணைத்ததன் மூலம், இந்தியாவின் தலைமை உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு நடத்தப்பட்ட பாரத மண்டபம் கூட இப்போது மிகவும் பிரபலமாகி விட்டது. பலரும் அந்த மண்டபத்தின் முன்பாக ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். இந்தியா வளமான தேசமாக, சிறந்த வர்த்தக சக்தியாக இருந்த பழங்காலத்தில் ‘பட்டுப்பாதை’ எனும் வர்த்தக வழித்தடத்தை பயன்படுத்தி உள்ளது. அதே போல தற்போது இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடத்தை ஜி20 மாநாட்டில் முன்வைத்துள்ளது. இந்த வர்த்தக பாதை அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடித்தளமாக இருந்து பயன் அளிக்கக் கூடியது. இந்த பொருளாதார பாதை திட்டம் இந்திய மண்ணில் தொடங்கப்பட்டது என்பதை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும்.