சென்னை: பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிப்புக்கு முன்னதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜவுடன் மோதல் வெளியானதும், கூட்டணி முறிவு அறிவிப்பை முன் கூட்டியே தயாரிக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். நேற்று மாலை கட்சி அலுவலகம் வந்ததும் நேராக பொதுச் செயலாளருக்கான அறைக்குச் சென்றார். கூட்டணி முறிவு அறிக்கையை கொண்டு வரும்படி கூறிய எடப்பாடி பழனிசாமி, அதை கே.பி.முனுசாமியை அழைத்து படித்து பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் ஓகே என்றதும், சி.வி.சண்முகத்தை வரவழைத்து படிக்கும்படி கூறியுள்ளார். அவர் படித்து முடித்ததும், வேலுமணியை அழைத்து கூட்டத்தில் இதை வாசியுங்கள் என்று எடப்பாடி கூறியுள்ளார். அதற்கு காரணம், அண்ணாமலையுடன் நெருக்கமாக இருப்பவர், பாஜ கூட்டணியை வேண்டும் என்பவர் என்பதால் வேலுமணியை அழைத்து படிக்கும்படி கூறியுள்ளார். 

இதனால் அவர் கூட்டத்தில் அறிக்கையை படிப்பதற்கு முன்னதாக, தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று கூறிவிட்டு அறிக்கையை படித்தார். பின்னர் அதை தீர்மானமாக நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். அப்போது மாற்றுக் கருத்து இருந்தால் பேசுங்கள் என்று கூறியவுடன் கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, செம்மலை ஆகியோர் பேசினர். அவர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவே பேசினர். உடனே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து மாற்றுக் கருத்து உள்ளவர்கள் பேசலாம் என்று வலியுறுத்தியுள்ளார். 

அப்போது புதுவை மாநில செயலாளர் அன்பழகன் எழுந்து, கூட்டணி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதனால் அவர் பேசட்டும் என்றார். இதனால் ஜெயக்குமார் எழுந்து, முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மறுப்பவர்களுடன் எப்படி நாம் கூட்டணி வைக்க முடியும். இதனால்தான் கூட்டணி இல்லை என்ற முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு 2024 தேர்தலுக்கு மட்டுமல்ல, 2026 தேர்தலுக்குமானது என்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றுள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நமக்கு சிறுபான்மை மக்களின் ஓட்டு இதுவரை கிடைக்கவில்லை. இனி சிறுபான்மை மக்களிடம் நம் முடிவை சொல்லுங்கள். இதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றவர், 5.45 மணிக்குள் நல்ல நேரம் முடிகிறது. இதனால் அதற்குள் கூட்டணி முறிவு செய்தியை அறிவித்து விடுங்கள் என்று மூத்த நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். அதன்பின்னர் கூட்டணி முறிவு பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மோடி, பாஜ, அண்ணாமலை ஆகிய 3 வார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி உச்சரிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பாஜ நிர்வாகிகளுக்கு கண்டிப்பு 
அதிமுக அறிவிப்பு வெளியிட்டவுடன் அண்ணாமலையின் நண்பரான அமர்பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள டிவிட்டரில், ஊர்ந்து சென்று பதவி வாங்கவில்லை என்பது உள்பட எடப்பாடியை திட்டி பல தகவல்களை வெளியிட்டார். கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியானதும் அதிர்ச்சி அடைந்த பாஜ தலைமை, உடனடியாக இந்த டிவிட்டரை நீக்கும்படி கூறியுள்ளது. இதனால் அமர்பிரசாத் ரெட்டி தான் போட்ட டிவிட்டரை நீக்கிவிட்டார். அதேபோல ஆங்கில டிவி சேனலுக்கு வினோஜ் பி செல்வம், அதிமுக விலகலால் எந்த பாதிப்பும் இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். 

அவரையும் மன்னிப்பு கேட்கும்படி தலைமை உத்தரவிட்டதால், தலைமையிடம் கருத்து கேட்காமல் கூறியதால், டிவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தமிழக பாஜவில் உள்ள 31 செய்தி தொடர்பாளர்கள் யாரும் பேட்டி அளிக்க வேண்டாம் என்று மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் கூறினார். இதனால், அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. எடப்பாடி அறிவிப்பு குறித்து தேசிய பாஜ தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் அண்ணாமலையையும் கருத்து கூற வேண்டாம் என்று தேசிய தலைமை அறிவித்து விட்டது. அவரும் தற்போது அமைதி காத்து வருகிறார். மேலிடம் எடுக்கும் முடிவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram