சென்னை: காங்கேயம் படியூரில், செப்டம்பர் 24 அன்று நடைபெறும் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில் கடந்த மார்ச் 22ல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழகத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் அறிவுரையின்படி சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கென ‘‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்’’ நடத்திட முடிவெடுக்கப்பட்டு, கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் முறையே டெல்டா மற்றும் தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து,மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்’ வருகிற 24ம் தேதி காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூர், கோவை மாநகர்,கோவை வடக்கு, கோவை தெற்கு,நாமக்கல் கிழக்கு,நாமக்கல் மேற்கு,நீலகிரி ஆகிய 14 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள்,தமது மாவட்டங்களுக்குட்பட்ட ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை’ கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.