சென்னை: எந்த வேலைக்கும் குழந்தைகளை பணியமர்த்தினால் அபராதம், சிறை தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று தொழிலாளர் ஆணையரகம் எச்சரித்துள்ளது. வடசென்னையில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிதல், மீட்டெடுத்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தலில் உள்ள இடர்பாடுகளை கண்டறியும் வகையில், விழிப்புணர்வு பட்டறை சென்னை எஸ்.ஐ.சி.சி. அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், கூடுதல் தொழிலாளர் ஆணையர் (நிர்வாகம்) சி.ஹேமலதா, சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உ.உமாதேவி, சென்னை தொழிலாளர் இணை ஆணையர்-1 விமலநாதன் மற்றும் தொழிலாளர் துறையின் அமலாக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பீகார் மற்றும் ஒடிசா வேலையளிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு, வடசென்னையில் உள்ள நகைகடைகளின் உரிமையாளர் சங்கம், தோல் பைகள் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வடசென்னை பகுதிகளில் உள்ள இதர வேலையளிப்போர் பிரதிநிதிகள் ஆகியோருடன் தொழிலாளர் துறையுடன் பங்களிப்பில் உள்ள துறைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறையினை தமிழ்நாட்டிலிருந்து 2025ம் ஆண்டுக்குள் முற்றிலும் அகற்றிடும் நோக்கில் மற்றும் தமிழ்நாட்டை குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், பிற மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வரும் கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை தடுத்திடும் வகையிலும், வேலையளிப்பவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அபாயகரமான பணி உள்ளிட்ட எந்த பணியிலும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது. இது சட்ட விரோதமாகும். அவ்வாறு குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவதால் சட்ட விதிகளின்படி அபராதம் மற்றும் சிறை தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும், என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடுப்பது தொடர்பாக வேலையளிப்போர்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
அதில் வேலையளிப்பவர்கள் சங்கத்தினர் இனி எதிர்வரும் காலங்களில் குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் எவரையும் பணியமர்த்தமாட்டோம் என அவர்களது சங்கங்களின் பொதுக்குழு கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட உறுதிமொழி படிவத்திலும் கையொப்பமிட்டனர். மேலும் இனி எதிர்வரும் காலங்களில் குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை அகற்றுதலில் அரசுக்கு உறுதுணையாக இருந்து, தமிழ்நாட்டினை குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற தங்களின் பங்களிப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.