புதுடெல்லி: நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அரசுமுறை பயணமாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். அவர்கள், கர்நாடகா மாநிலத்தின் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தை நேற்று டெல்லியில் நடத்தினார்கள்.
இதையடுத்து அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஒருசில தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் அம்மாநில அனைத்து கட்சி எம்பிக்களின் குழு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவாத் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இருமாநிலங்களுக்கும் இடையே ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீர் பங்கீடு பிரச்னையில் ஒரு சுமூக முடிவை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மனுவான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, அதோடு இனைத்து விசாரிக்கப்படும் என தெரிவருகிறது.