புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி ஆணையத்தின் அவசர கூட்டம் 18ம் தேதி நடைபெறும் என அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் நேற்று அறிவித்துள்ளார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், அதேப்போன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உடனடியாக மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த மாதம் ஆணையிட்டது.
இதையடுத்து ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் படி வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப். 12ம் தேதி வரையில் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஆணையம் முன்னதாக உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், ”காவிரி ஒழுங்காற்று குழுவின் 86வது கூட்டம் கடந்த 12ம் தேதி அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடத்தப்பட்டது. இதில்,”காவிரியில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு, அதாவது 12.09.2023 முதல் 27.09.2023 வரையில் வினாடிக்கு 5000 கன அடி என்ற வீதம் தமிழ்நாட்டுக்கு, கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் இதுகுறித்த பரிந்துரையும் அன்றைய தினமே காவிரி ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடகா அரசு, காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. மேலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்றும், அதுகுறித்து எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது எனவும் கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்தை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். மேலும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிராக கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்திலும் முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் நேற்று ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக காவிரி ஆணையத்தின் அவசர கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு,கர்நடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அன்றைய தினம் நடக்கும் கூட்டத்தின் போது, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடாதது, அதுகுறித்து கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, ஒழுங்காற்று குழுவின் உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்றாமல் இருப்பது ஆகியவை குறித்து தமிழ்நாட்டு அதிகாரிகள் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவரிடம் குற்றச்சாட்டாக முன் வைப்பார்கள் என தெரியவருகிறது. இதில் காவிரி நீர் பங்கீடு வீவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர வழக்கானது வரும் 21ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காவிரி ஆணையத்தின் இந்த அவசர கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
* வரும் 27ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு உத்தரவு.
* இது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் கர்நாடக துணை முதல்வர் முறையீடு.
* பிரச்னைக்கு தீர்வு காண காவிரி ஆணைய அவசர கூட்டம் திங்கட்கிழமை நடக்கிறது.