சென்னை: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை, கிண்டியில் ஒன்றிய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனவால் தலைமையில் குளோபல் கடல்சார் இந்திய உச்சி மாநாடு சாலைக்கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. வ.உ.சி துறைமுக விரிவாக்கத் திட்டம், தமிழ்நாடு மாநிலம் மற்றும் பரந்த தென் பிராந்தியத்திற்கு ஒரு முழுமையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, தொழில்மயமாக்கலுக்கு கணிசமான ஆதரவை வழங்குவதுடன், தமிழகத்தில் எண்ணற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கவும் இயலும்.
வ.உ.சி. துறைமுக விரிவாக்கத் திட்டம், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் நீண்டகால கனவை நிறைவேற்றுவதுடன், இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் கணிசமான செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், விலைமதிப்பற்ற அந்நியச் செலாவணியை குறைக்கும் என்பதில் ஐயமில்லை. வ.உ.சி. துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
* கடல்வழி பரிமாற்ற முனையம் தொடங்க ஆய்வு – ஒன்றிய அமைச்சர் சோனாவால்
ஒன்றிய அமைச்சர் சோனாவால் பேசும்போது, ‘‘சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவில் 106 திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. 48 திட்டங்கள் ரூ.35 ஆயிரத்து 133 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 26 திட்டங்கள் ரூ.64 ஆயிரம் கோடி செலவில் செயல்பட உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி செலவில் கிரீன் ஹைட்ரஜன் முனையம் அமைக்க ஆயத்த பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் கடல்வழி பரிமாற்ற முனையம் தொடங்க முதல்கட்ட அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு பரிசீலனையில் உள்ளது’’ என்றார்.