சென்னை: தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக கிடைத்ததோ வெறும் வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் தான். ஆனால் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்து வஞ்சனை செய்கிறது ஒன்றிய அரசு. குஜராத் மாடல் என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் மோடி. இந்தியாவை காப்பாற்றப் போவது இந்தியா கூட்டணி தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடியோ சீரிஸ் வெளியிட்டுள்ளார். ‘‘வஞ்சிக்கும் பாஜவை வீழ்த்துவோம், இந்தியாவை மீட்டெடுப்போம்’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ ஆடியோ சீரிஸ் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோ பதிவு என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆடியோ பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முதல்வராக, இந்திய நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியான திமுக தலைவராக இருக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனாக, இந்தியாவிற்காகப் பேசப் போவது தான் இந்த ‘பாட்காஸ்ட் சீரிசின்’ நோக்கம். இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக, இந்திய மக்கள் அனைவரும் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜ முயற்சி செய்கிறது. 2014ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பாஜ, இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்றெல்லாம் ‘வாயால் வடை சுட்டார்’கள். 

10 ஆண்டில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல் இப்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப் போகிறது. திராவிட மாடல் என்னென்ன சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார்கள் என்று நாம் புள்ளி விவரத்தோடு அடுக்கிய பிறகு, அவர்கள் ‘குஜராத் மாடல்’ பற்றி, இப்போது மறந்தும் கூட பேசுவதில்லை. இன்னொரு பக்கம், இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பை சீரழித்து, தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அதை மடைமாற்றும் செயலை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார்கள். 

அரசுக்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம், இப்போது தனியாருக்கு விற்கப்பட்டு விட்டது. துறைமுகங்களும் தனியார் கைக்குப் போகிறது. பிரதமர் மோடி சொன்னது போல், உழவர்களின் வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை; ஏழை பாழைகளின் வாழ்க்கைத்தரமும் உயரவில்லை. இதை மறைக்க தான் மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மத உணர்வுகளைத் தூண்டி, அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு, மக்களாட்சி மாண்புக்கு எப்போதெல்லாம் ஆபத்து வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் முன்னணிப் படையாக திமுக நின்றிருக்கிறது. 

பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம் திமுக. இப்போது மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. 2024 தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்று தீர்மானிக்க வேண்டிய தேர்தல். 9 ஆண்டு கால பாஜ ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற படுபாதகமான பல மோசடிகள் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் நிதி உரிமையை முழுவதுமாக பறித்துவிட்டது ஜி.எஸ்.டி. தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக, 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. 

2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் தான். பெற்றதை முழுவதுமாகத் தர முடியாது என்று சொன்னால் பாஜ ஆளுகிற மாநிலத்திற்கு மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது?. பாஜ ஆளும் ஒரு மாநிலம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் தான் வரியாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் வரிப் பகிர்வாக, 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இதைத் தான் ஓரவஞ்சனை என்று சொல்கிறோம். இவ்வாறு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக ஒன்றிய பாஜ ஆட்சி இருக்கிறது. ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது. 

12வது நிதிக் குழுவில் 5.305 விழுக்காடாக இருந்த நிதி ஒதுக்கிடு, 15வது நிதிக் குழுவில் 4.079 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய 72,311 கோடி ரூபாயை நாம் இழந்திருக்கிறோம். பல திட்டங்களுக்கான பெரும் பங்கு மாநில அரசால் தான் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான பெயர் மட்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் என்று ஒன்று கூட இந்த 9 ஆண்டுகளில் தரவில்லை. மாநிலங்களைப் பழிவாங்குகிற அரசாக இப்போதைய ஒன்றிய பாஜ அரசு இருக்கிறது. 

மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளை சிதைப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்கப் பார்க்கிறார்கள். சமூக நீதி, மதச்சார்பற்ற அரசியல், சோசலிசம், சமத்துவம், சமூக நல்லிணக்கம், மாநில சுயாட்சி, கூட்டாட்சி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய இவை உயிர்வாழும் இந்தியா தான் உண்மையான இந்தியா. இணையற்ற இந்தியா. அப்படிப்பட்ட இந்தியாவை மீட்டெடுக்கத் தான் இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த ‘இந்தியா’ கூட்டணி தான். 

பாஜவின் வகுப்புவாத, வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும், ஹரியானாவும் பலியானதைப் போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும். இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னாவிலும், பெங்களூரிலும், மும்பையிலும் நடந்துள்ளன. பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவைச் செதுக்குவோம், இந்தியாவைக் காப்போம். அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம். இனி இது மு.க.ஸ்டாலின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள், வெல்க இந்தியா. இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

* ‘இதைத்தான் ஓரவஞ்சனை என்கிறோம்’ 
2014 முதல் கடந்த ஆண்டு வரை தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் தான். பெற்றதை முழுவதுமாகத் தர முடியாது என்று சொன்னால் பாஜ ஆளுகிற மாநிலத்திற்கு மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது? பாஜ ஆளும் ஒரு மாநிலம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் தான் வரியாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் வரிப் பகிர்வாக, 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இதைத் தான் ஓரவஞ்சனை என்று சொல்கிறோம். 

* மாநில அரசுகளை சிதைப்பதையே பாஜ அரசு நோக்கமாக கொண்டுள்ளது 
* மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஓரவஞ்சனை; தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு மிக குறைவு 
* மதவெறி தீ மக்களின் உயிரை காவு வாங்குகிறது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram