சென்னை: மெட்ரோ ரயில்வே அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து சாலை பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதற்கு முன்னதாக, தற்போது நடந்து வரும் சாலை பணிகள், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும். புதிதாக எந்த பணிகளும் சாலைகளில் தொடங்க வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராம்நகர் 7வது குறுக்கு தெரு, 3வது பிரதான சாலை மேற்கு பகுதி மற்றும் ராம்நகர் 3வது பிரதான சாலை கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் ₹85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நெடுஞ்சாலை துறை சார்பில் மணப்பாக்கம் – கொளப்பாக்கம் – கெருகம்பாக்கம் சாலையில் 4 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், ராமாபுரம் – திருவள்ளுவர் சாலையில் ₹2 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற சாலை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகளை போக்குவரத்திற்கு இடையூறில்லாமல் மேற்கொள்வதற்கும், பணிகளை விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த பகுதியில் குழாய்கள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டவுடன் நெடுஞ்சாலைத்துறையால் இந்த சாலை போர்க்கால அடிப்படையில் ₹4 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதை முதல்வர் பார்வையிட்டார். வளசரவாக்கம் முதல் வடபழனி சிக்னல் வரை நடந்து வரும் சாலை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் அமைந்துள்ள சாலை பணிகளை சீர்செய்திடவும், காலதாமதமில்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Ads by
இந்த ஆய்வு பணியின்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘‘அனைத்து பணிகளும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும். நகராட்சி நிர்வாக துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.