புதுடெல்லி: மக்களவையில் நடந்த விவாதத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் எம்பி குறித்து பாஜ எம்.பி ரமேஷ் பிதுரி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஆபாசமாக பேசினார். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இப்படி ஒரு ஆபாச பேச்சு அரங்கேறியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரமேஷ் பிதுரி எம்.பியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 4 நாட்களுக்கு நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் முதலில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்திலும் செயல்பட்டது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த முதல் கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதத்தின்போது தெற்கு டெல்லி தொகுதி பாஜ எம்பி ரமேஷ் பிதுரி பேசினார். அவரது பேச்சு நாடாளுமன்றத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் எம்பி டேனிஸ் அலியை நோக்கி பாஜ எம்பி ரமேஷ் பிதுரி தகாத வர்த்தைகளை கூறினார். அவரது ஆபாச பேச்சு எதிர்க்கட்சி உறுப்பினர்களளை அதிர்ச்சியடையச் செய்தது.
அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ரமேஷ் பிதுரிக்கு அருகில் அமர்ந்திருந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர்களும், பாஜ மூத்த தலைவர்களுமான ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன் ஆகியோர் அவரது பேச்சை சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து நின்று , பாஜ எம்பி பிதுரி பேசியதற்காக மக்களவை உறுப்பினர்களிடம் வருத்தம் தெரிவித்தார். எனினும் உறுப்பினர்கள் இதனை ஏற்க மறுத்து முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து ரமேஷ் பிதுரியின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அவர் பேசிய வீடியோ காட்சி நேற்று காலை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோல ஆபாசமாக எந்தவொரு எம்.பி.யும் பேசியது இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.