
சென்னை: விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் 2வது மற்றும் கடைசி கட்ட உயரம் குறைக்கும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. நாளை மறுநாள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் சந்திரயான்-3 செயற்கைக்கோள் புவிவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செயற்கைக்கோளின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த ஆக.1ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலகி விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த ஆக.5ம் தேதி முதல் பயணிக்க தொடங்கியது.
செயற்கைக்கோளின் உயரம் குறைக்கப்பட்டு கடந்த ஆக.17ம் தேதி விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கான சுற்றுப்பாதையில் பயணிக்கும் லேண்டரின் உயரமும் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கபட உள்ளது. முதல் கட்டமாக ஆக.18ம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. அப்போது 113கி.மீ. x 157கி.மீ. தூரத்தில் நிலவை சுற்றிவந்தது. இந்நிலையில் 2வது மற்றும் இறுதிக்கட்ட உயரம் குறைக்கும் பணி நேற்று அதிகாலை 2 மணியளவில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலத்தில் இருந்து பிரிந்த பிறகு லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இரண்டாவது மற்றும் கடைசி கட்ட உயரம் குறைப்பு பணிகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு, நிலவில் இருந்து 25 x 134 கி.மீ துரத்தில் லேண்டர் உள்ளது. இதையடுத்து லேண்டர் உள் சோதனைகளை நடத்தி சூரிய உதயம் வரை காத்திருந்து நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தரையிறங்கும். நிலவில் தரையிறக்கும் பணி ஆக.23ம் தேதி மாலை 5.45 மணியளவில் தொடங்கும். மாலை 6 மணியளவில் நிலவில் தரையிறங்கும். இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது. இந்நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆராய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது. நேற்று முன்தினம் விண்கலத்தின் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் விண்கலம் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.