புதுடெல்லி: ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை இரண்டாவது முறையாக ஏற்றுக்கொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி என்ற வீதம் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், அதேப்போன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் முன்னதாக நடந்த ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் படி வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு செப்.12ம் தேதி வரையில் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஆணையம் முன்னதாக உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதையடுத்து அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில்,” காவிரி ஒழுங்காற்று குழுவின் 86வது கூட்டம் கடந்த 12ம் தேதி அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடத்தப்பட்டது. இதையடுத்து கூட்டத்தின் முடிவில்,\\”காவிரியில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு, அதாவது 12.09.2023 முதம் 27.09.2023 வரையில் வினாடிக்கு 5000 கன அடி என்ற வீதம் தமிழ்நாட்டுக்கு, கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் இதுகுறித்த பரிந்துரையும் அன்றைய தினமே காவிரி ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 24வது அவசர கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடந்தது. அதில், இதில் தமிழ்நாடு சார்பாக நீர்வளத்துறை தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், உறுப்பினர் பட்டாபி ராமன் மற்றும் உதவி பொறியாளர் நிஷா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாட்டு அதிகாரிகள் வைத்த குற்றச்சாட்டில்,\\”கடந்த 12ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டு, காவிரி ஆணையத்திற்கு பரிந்துரையும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை கர்நாடகா அரசு மதிக்காமல் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.
மேலும் முந்தைய மாதங்களில் நிலுவையில் இருக்கும் நீரையும் உடனடியாக திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக 5000 கன அடி தண்ணீர் என்பது தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் வறட்சி சூழலில் போதாது என்பதால், வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக நடப்பாண்டில் செப்டம்பர் 14ம் தேதி வரையில் மொத்தம் 103.5 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 38.4 டி.எம்.சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் மீதமுள்ள நிலுவை நீரை உடனடியாக காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அதிகாரிகள்,‘‘மாநிலத்தில் போதிய மழை கிடையாது. மேலும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கே நீர் பற்றாக்குறையாக உள்ளது. அணைகளிலும் போதிய நீர் இருப்பு கிடையாது. தற்போது இருக்கும் சூழலில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இருப்பினும் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் வேண்டுமானால் திறக்கலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து கூட்டத்தின் முடிவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஆணையம் ஏற்கிறது. அதனால் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி என்ற வீதம் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
* தமிழக எம்பிக்கள் குழு இன்று சந்திப்பு
இதையடுத்து அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,‘‘காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் குழு நாளை (இன்று) காலை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளது. இதில் தற்போது வரையில் 107 டி.எம்.சி தண்ணீர் பாக்கி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை நாங்கள் நம்பவில்லை. உச்ச நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம். ஏனெனில் கர்நாடகா அரசு ஒருபோதும் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒப்புக்கொண்டது கிடையாது. இதுகுறித்தெல்லாம் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும் போது தெளிவாக எடுத்துரைத்து வலியுறுத்துவோம்’’ என தெரிவித்தார்.
* ஒன்றிய அமைச்சரை சந்தித்த ஆணைய தலைவர் ஹல்தர்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார். அப்போது, காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை, ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வைத்த கோரிக்கை, பின்னர் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்தும் விரிவாக எடுத்துரைத்ததாக தெரியவருகிறது