சென்னை: ஆதித்யா எல்1 விண்கலம் சீராக இயங்கி வருவதாகவும், விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனைக் கண்காணிக்கவும் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 63வது நிமிடத்தில் ஆதித்யா விண்கலம் ராக்கெட்டின் கடைசி பாகத்தில் இருந்து பிரிந்து புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 4 மாதங்கள் லிக்விட் அப்போஜி மோட்டார் மூலம் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட்டை மையமாக கொண்டு ஒளிவட்ட பாதைக்கு சென்றடையும். லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஹெலோ ஆர்பிட் எனப்படும் ஒளிவட்ட பாதையில் பயணித்து ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இந்நிலையில் தற்போது புவி வட்டபாதையில் சுற்றி வரும் ஆதித்யா விண்கலம் முதல் சுற்றை முடித்து முதல் கட்ட உயரம் அதிகரிக்கும் பணி நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆதித்யா விண்கலம் நன்றாக இயங்கி வருகிறது. நேற்று காலை 11.40 மணியளவில் முதல் கட்ட உயரம் அதிகரிக்கும் பணிகள் நடந்தது. அதன்படி 245கி.மீ. x 22459கி.மீ. தூரத்தில் விண்கலம் உள்ளது. அடுத்தக்கட்ட உயரம் அதிகரிக்கும் பணி நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.