இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இன்று வெளி வந்துள்ள ராவண கோட்டம் படம் பல பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.
கருவேல மர பிரச்சினை கதையா
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் வந்த மதயானைக்கூட்டம் படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கிய படம் ராவண கோட்டம் .
சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் விக்ரம் சுகுமாறனின் முதல் படமான மதயானைக் கூட்டம் சாதியை மறுத்தாலும், சில இடங்களில் சாதியைத் தூக்கிப் பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இராவண கோட்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின், அதேபோன்ற விமர்சனங்கள் இந்தப் படத்துக்கும் எழுப்பப்பட்டன.
இந்த படத்தை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வாழும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்த மக்கள் பழகி வருகின்றனர்.
இந்த இரண்டு ஜாதியை சேர்ந்தவர்களை நடிகர் பிரபு. வும், இளவரசு. வும் நட்பு பாராட்டுகின்றனர்.
இந்நிலையில் அந்த இரண்டு கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் உருவாகிறது. இதை தீர்க்க வரும் பிரபு. வும், இளவரசுவும் கொல்லப்படுகின்றனர். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை.
இதில் என்ன ஜாதி பிரச்சினை
இதில் சாந்தனு. வும், கயல் ஆனந்தியும் காதலர்களாக வருகின்றனர். 1957 ஆம் ஆண்டு நடந்த முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியில், சாதீய பிரச்சினை, முக்கோணக் காதல் கதை மற்றும் சில கமர்ஷியல் அம்சங்களையும் கூட்டி கதை சொல்லியிருக்கிறார்கள்.
சாந்தனுவா இது?
இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த பாக்யராஜ் மகன் சாந்தனு இந்த படத்தில் கரடு முரடான இளைஞன் பாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளைக் காட்டிலும் ஆக்ரோஷமாக கபடி விளையாடுவது, பிரபுவுக்காக கதறி அழும் காட்சிகள், நண்பனிடம் பேச முடியாமல் வருந்தும் காட்சிகளில் சாந்தனு மிளிர்கிறார். இரு சமூகத்து தலைவர்களாகவும் நண்பர்களாகவும் வலம் வரும் நடிகர் பிரபுவும் இளவரசுவும் தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றனர்.
சாந்தனுவின் நண்பராக மதிமாறனாக நடித்துள்ள சஞ்சீவ் சரவணனுக்கு கனமான பாத்திரம். தன் நண்பன் சாந்தனுவின் காதலி ஆனந்தியுடன் சூழ்ச்சியால் காதலில் விழும் இடங்களில் பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறார். இன்னும் கொஞ்சம் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கலாம். ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்குத் தேவையானதை செய்கின்றன.
ஜாதி பிரச்சினையை சொல்கிறதா?
சாதீய கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம் எனும் டைட்டிலுடன் தொடங்கினாலும், எங்க அய்யா பாடல், பிரபுவை சித்தரிக்கும் விதம் உள்ளிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கான துதியாகவே மாறும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. முந்தைய படத்துக்கு எழுந்த கடும் விமர்சனங்களால் பிரபுவின் அறிமுகக்காட்சி பின்னணியில் அம்பேத்கர், பெரியார் படங்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
அரிவாள், கம்பு, சாதிப் பிரச்னைகள் தாண்டிய தென் தமிழகத்து மக்களின் அடையாளங்களும் பாரம்பரிய வாழ்க்கையும் எப்போது வெள்ளித்திரையில் பதிவு செய்யப்படும் எனத் தெரியவில்லை. முதல் பாதியில் போதிய கவனம்செலுத்தி, இந்தக் குறைகளை நிவர்த்தி செய்திருந்தால், இராவண கோட்டம் அதன் நோக்கத்தை பூர்த்தி செய்து கவனம் ஈர்த்திருக்கும்
கருவேல மர விதைகளை காமராஜர் காலத்தில் பனைமரங்களின் நலத்திற்காக தூவப்பட்டது என்பது போன்ற விசயங்களை தவிர்த்து இருந்தால் நல்லது.