வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரங்களும் விரிவடைந்துக்கொண்டே செல்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தை தேடி சென்னை போன்ற நகரங்களை நோக்கி தொடர்ந்து குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால் சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டியுள்ளது. மற்ற நகரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். இப்படி இருக்கையில் இவர்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
எனவே இவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் அடிக்கடி இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் தவிர திருவிழாக்கள், பண்டிகை நாட்கள், திருவண்ணாமலை கோயில் கிரிவல நாட்கள் போன்றவற்றிற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் எதிர்வரும் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.