திருமலை: ஆந்திராவில் குப்பைகளை சேகரிப்பது போல் நாடகமாடி மயக்க மருந்து தெளித்து குழந்தைகளை கடத்திய கும்பலை சேர்ந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 2 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சில குழந்தைகள் ரூ.5 ஆயிரம், குவாட்டருக்காக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ராஜிபாளையம் பகுதியில் அழுக்கான, கிழிந்த உடை அணிந்த 2 பேர், பெரிய கோணிப்பைகளுடன் நடந்து சென்றனர்.
இதனை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் திருடர்கள் என நினைத்து அவர்களை பிடிக்க முயன்றனர். இதனால் அவர்கள் தப்பி ஓடினர். ஆனாலும் பொதுமக்கள் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து, பைகளை பார்த்தபோது 2 பைகளில் குழந்தைகள் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த குழந்தைகளை மீட்டு, அவர்களை சரமாரியாக அடித்து உதைத்து, அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நெல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அழுக்கான, கிழிந்த ஆடைகளுடன் குப்பைகளில், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பவர்கள் போல், பெரிய பையை வைத்துக்கொண்டு கும்பல் இயங்குகிறது. இவர்கள் தனித்தனியாக பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிவார்கள். அப்போது வீடுகளில் தனியாக இருக்கும் குழந்தைகள், தெருக்களில் விளையாடும் குழந்தைகளை மயக்க மருந்து தெளித்தும், கர்ச்சிப்பில் மயக்க பவுடர் வைத்து அதன் மூலமும் மயங்க வைத்து பையில் போட்டு ஆட்டோவில் மூட்டை போன்று கடத்திசெல்வது தெரியவந்தது. அவ்வாறு குழந்தைகளை கடத்திச் சென்று நெல்லூர் காவாலி பைபாஸ் சாலையில் பாலத்தின் கீழ் இரவு நேரத்தில் கும்பலின் தலைவனிடம் குழந்தைகளை ஒப்படைப்பார்கள். அதற்கு பதிலாக ரூ.5 ஆயிரம் மற்றும் குவாட்டர் பாட்டில்களை வாங்கிக்கொள்வார்கள்.
பொதுமக்களிடம் பிடிபட்டவர்களில் ஒருவர் இதுவரை 2 குழந்தைகளை கடத்தியதாகவும், மற்றொருவர் 10 குழந்தைகளை கடத்தியதாகவும் தெரிய வந்தது. இதுவரை கடத்தப்பட்ட குழந்தைகள் என்ன ஆனார்கள்? அவர்கள் எங்கு உள்ளார்கள், குழந்தைகளை வாங்கியவர்கள் யார்? என போலீசார் பிடிபட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த குழந்தைகளை பிச்சை எடுக்கவும், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும், உடல் உறுப்புகளை திருடி விற்பதாகவும் தகவல் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே பொதுமக்களிடம் பிடிபட்டவர்களில் ஒருவரை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர்.