சென்னை: வாச்சாத்தியில் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 215 பேருக்கு தர்மபுரி அமர்வு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டாத அப்போதைய அரசு (அதிமுக) தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டதாகவும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த கிராமம் முழுவதும் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது. தீர்ப்பில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்களிடம் விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பி.வேல்முருகன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பழங்குடியின பெண்களை வன்கொடுமை செய்ததில் வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளனர்.