சென்னை: கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நடைபெறும் ‘கலைஞர் 100’ என்ற வினாடி-வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே மாணவாகள் தயாராக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கலைஞரின்‌ நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில்‌ திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் கலைஞர் 100 வினாடி வினா, இணையவழி மற்றும் நேரடியாக வருகிற 15ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 75 நாட்கள் (இணையத்தில் 45 நாட்கள் & நேரடியாக 30 நாட்கள்) நடைபெற இருக்கிறது. 

வயது வரம்பில் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு 18 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நடைபெறும். இப்போட்டியை திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார். இன்று(நேற்று) முதல் வருகிற 14ம் தேதிக்குள் அனைவரும் கலைஞர் வினா விடைக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளக் கொடுக்கப்பட்ட அவகாசமாக கூறப்படுகிறது.கலைஞர் 100 வினாடி வினா காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது: 

தமிழினத்தின் அறிவொளியாக, தன்னிகரில்லா ஆளுமையாக வாழ்ந்து வழி காட்டிய கலைஞரின் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தை, தமிழ்நாட்டு என்னும் பெருநிலத்தை, தமிழின வரலாற்றை அனைவரும் அறிந்திடும் வண்ணம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மற்றும் திமுக மகளிர் அணியின் முன்னெடுப்பில் ‘கலைஞர் 100 – வினாடி வினா’ போட்டி நடைபெறவிருக்கிறது. நமது முந்தைய களப் போராட்டங்களை, நாம் மேற்கொண்ட அரசியல் புரட்சியை, அதற்கு வித்திட்ட நம் முன்னோடிகளை, நாம் அனைவரும் திரும்பிப் பார்க்கவும், நம் அடுத்த தலைமுறையிடம் எடுத்துக்கூறவும், இந்த வினாடி-வினா போட்டி பெரும் திறப்பாக அமையும். 

பத்தாயிரம் கேள்விகளோடு, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக நடைபெறும் இந்த வினாடி வினா போட்டியில், எல்லோரும் கலந்துகொண்டு தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம். kalaignar100.co.in என்ற இணையத்தளத்தில் வருகிற 15ம் தேதி அன்று இணையவழிப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. வரலாற்றின் தனிப்பெரும் மக்கள் இயக்கத்தை, இணையில்லா நம் தலைவரின் நூற்றாண்டில் கொண்டாடுவோம். வாருங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் திமுக மகளிரணி சார்பில் கனிமொழி முன்னெடுக்கும் கலைஞர்100-ல் வினாடி – வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15ம் நாள் தொடங்கவுள்ள உள்ள Kalaignar100quiz வினாடி வினாப் போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram