அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலையை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த 3 வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
செந்தில் பாலாஜி தரப்பு இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை உறுதி செய்தனர். இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் அடுத்தடுத்து நடைபெற்றது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனைக்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இதய அறுவை சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, இந்த கைதை எதிர்த்து ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அதை தொடர்ந்து 3 வது நீதிபதிக்கு வழக்கு செல்ல, அவர், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு செய்தார்.