“மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்தவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை.” என உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசி வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேச வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து பேசாத நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர்.
50 உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் சபாநாயகரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சம்மதம் தெரிவித்தார். நேற்று மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. நேற்று முதல் நாள் விவாதம் மட்டும் சுமார் 6 மணி நேரம் அனல் பறக்க நடைபெற்றது. இன்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துப் பேசி வருகிறார். அமித் ஷா பேசுகையில், “எதிர்க்கட்சிகளை மக்கள் நம்பவில்லை. மத்திய அரசு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததால் தான் பாஜகவை 2 முறை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களிடம் ஒரு மாயை உருவாக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. உண்மையான பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பவில்லை. மக்கள் விருப்பங்களை, தேவைகளை நம்பிக்கை இல்லா தீர்மானம் வெளிப்படுத்தவில்லை. சிறுபான்மையினர் குறித்து கூட கேள்வி எழுப்பவில்லை. வெறும் மாயையை ஏற்படுத்தவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால், இந்த அரசு செய்த பணிகளை நான் குறிப்பிட வேண்டும். 9 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் 50 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. 1947ல் நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டுமே அதிக மக்களின் நம்பிக்கையை வென்றது. ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக அவர்கள் கடனே வாங்க வேண்டியதில்லை என்ற நிலையை கொண்டு வர எங்கள் அரசு செயல்படுகிறது” என அமித் ஷா பேசியுள்ளார்.