கேரள சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய சட்டசபைக் கூட்டத்தில் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்தார். எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவுடன் இந்தத் தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது. “பொது சிவில் சட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான அவசர நடவடிக்கை, அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற தன்மையை இல்லாமல் செய்யும்” எனக் கூறி, பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன்பு மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் முதல் மாநிலம் கேரள என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று கேரள சட்டசபையில் மாநிலத்தின் பெயரை திருத்தும் சட்ட மசோதாவை முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்தார். அதில் மாநிலத்தின் பெயரை `கேரளா’ என்பதிலிருந்து திருத்தி `கேரளம்’ என மாற்றி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், “நம் மாநிலத்தின் பெயர் மலையாள மொழியில் கேரளம் ஆகும். மொழி அடிப்படையில் நம் மாநிலம் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உருவானது. நவம்பர் 1-ம் தேதி கேரளம் பிறந்த தினமாகும். மலையாள மொழி பேசும் மக்களுக்காக ஐக்கிய கேரளம் உருவாக்க வேண்டும் என தேச சுதந்திரப் போராட்டக் காலம் முதல் வலுவான கோரிக்கை எழுந்துவந்தது. ஆனால், அரசியல் அமைப்பின் முதல் பட்டியலில் நம் மாநிலத்தின் பெயர் `கேரளா’ எனக் குறிப்பிடப்பட்டது. எனவே, அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ் `கேரளம்’ எனத் திருத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்தப் பேரவை ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.