சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வலியுறுத்தி, அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று திடீரென தலைமை செயலகம் வந்து, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து நினைவூட்டல் கடிதம் அளித்தனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வருகிறார்கள். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பை திருமங்கலம் அதிமுக எம்எல்ஏவான ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிமுகவின் கோரிக்கை குறித்து, பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றம் வருகிற அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது. இதையடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், சு.ரவி, பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், தளவாய் சுந்தரம், மரகதம் குமரவேல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று காலை திடீரென சென்னை, தலைமை செயலகம் வந்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து, அவரிடம் ஒரு நினைவூட்டல் கடிதம் அளித்தனர்.
அதில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அதிமுக எம்எல்ஏக்கள் தேர்வு செய்து, தங்களிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபற்றி பலமுறை தங்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்துக்கு முன்னதாக ஆர்.பி.உதயகுமாருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கி, அவரது இருக்கையையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.