சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம், எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறது.
சந்திரயான் 3 இன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தை PSLV C57 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்றது. இதனை ஏவுவதற்கான கவுன்டவுன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு தொடங்கியது
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சமமான ஈர்ப்பு விசையை கொண்டு உள்ள எல்1 என்ற புள்ளியை 100 முதல் 120 நாட்கள் பயணித்து இந்த விண்கலம் அடைய உள்ளது. ஆதித்யா எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பிறகு ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய புயல், கொரோனா, பிளாஸ்மா குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
இந்தியாவால் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இந்த ஆதித்யா எல் 1 க்கும் உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நிகர் சாஜி தலைமையிலான குழு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை வடிவமைத்தது. இதன் சோதனைகளை வெற்றிகரமாக முடிந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு வரை இது பயணித்து எல் 1 என்ற புள்ளியை அடையும். அதன் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு இது திடமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது