சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, இ-சேவை மையங்கள் மூலம் அவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 30 நாட்களுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், தேர்தல் வாக்குறுதிபடி மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம்தேதி தொடங்கப்படும் என்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை அனுப்பப்பட்டது.
மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்தை, அண்ணாவின் 115வது பிறந்த நாளான கடந்த 15ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், விண்ணப்பத்தவர்களில் 56.60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முதல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரம் அறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்புகொண்டு விண்ணப்பம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாகவும் அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடமோ மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காலை முதல், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிப்பார்கள். மேலும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.