புதுடெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி என்ற வீதம் தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், அதேப்போன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உடனடியாக மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு, கர்நாடகா, காவிரி ஆணையம் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதேப்போன்று ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு 29.8.2023 காலை எட்டு மணி முதல் 12.09.2023 வரையில் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த காலக்கெடு நேற்றோடு நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 86வது கூட்டம் அதன் தலைவர் வீனீத் குப்தா தலைமையில் டெல்லி அலுவலகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பாக நீர்வளத்துறை தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் தமிழ்நாட்டின் தலைமைச்செயலக அலுவலகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரஸ் மூலம் பங்கேற்றனர்.
கூட்டத்தின் போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வைத்த குற்றச்சாட்டில், ‘‘கடந்த 15 நாட்களாக காவிரியில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை திறந்து விட ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின் படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனை கர்நாடகா முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. குறிப்பாக கடந்த ஐந்து நாட்களாக 4000 கன அடிக்கும் கீழாக தான் நீர் வரத்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வருகிறது. அதிலும் முக்கியமாக நேற்று 2,856 கன அடியாக குறைந்து விட்டது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்க இருப்பதால் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நலனை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் படி நீர் பங்கீட்டை கர்நாடகா அரசு சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
மேலும் முந்தைய மாதங்களில் உள்ள நிலுவை நீரையும் உடனடியாக தமிழ்நாட்டுக்கு தருவதற்கு கர்நாடகா அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவிட வேண்டும். அதேப்போன்று வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் என்பது போதுமான ஒன்று இல்லை என்பதால், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரைக்க வேண்டும். இதுகுறித்து கர்நாடகா அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்கள். இதையடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அரசு தரப்பு அதிகாரிகள், ‘‘மாநிலத்தில் போதிய மழை பெய்யாததால், அணைகளில் போதுமான தண்ணீர் கிடையாது.