சென்னை: நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆக. 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் கலனில் உள்ள பிரத்யேக கருவிகள் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவில் 14 நாட்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு தகவல்களை சேகரித்து, மேலும் லேண்டர் மற்றும் ரோவர் நடத்திய ஆய்வுகளின் தரவுகள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து லேண்டர் ஒரு இடத்தில் இருந்து சிறிது தூரம் பறந்து மீண்டும் வெற்றிகரமாக 30 – 40 செ.மீ. தொலைவில் தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து நிலவில் இரவு தொடங்கி உள்ளதால், கடந்த 2ம் தேதி நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ரோவரும், லேண்டரும் அடுத்த சூரிய உதயத்திற்காக காத்திருக்கிறது. இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: நிலவில் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 22ம்தேதி சூரியன் உதிக்க இருக்கிறது.
அப்போது மீண்டும் உறக்க நிலையில் இருக்கும் ரோவரில் உள்ள பேட்டரி உதவியுடன் தட்டி எழுப்பி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் லேண்டரையும் உறக்கத்தில் இருந்து எழுப்பி, ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது. அதில் உள்ள சோலார் பேனல் வருகிற 22ம் தேதி நிலவில் அந்த இடத்தில் மீண்டும் சூரியன் உதயமாகும்போது சூரிய சக்தியை பெறும். அப்போது ரோவர் அடுத்தக்கட்டப் பணிகளுக்கு மீண்டும் செயல்பட தொடங்கி ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று நம்புகிறோம். அதுவரையிலும் நிலவுக்கான இந்தியாவின் தூதராக அது அங்கேயே நிலைகொண்டிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.