திருமலை: வனவிலங்கு தாக்குதலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க திருப்பதி மலைப்பாதையில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக இன்று 2வது நாளாக டேராடூன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அலிபிரி அல்லது வாரி மிட்டா பகுதி வழியாக மலைப்பாதையில் நடந்து சென்று தரிசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவனை சிறுத்தை கவ்விச்சென்று அண்மையில் விடுவித்தது. இதன்தொடர்ச்சியாக ஒரு சிறுமியை கவ்விச்சென்று கொன்றது. சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவங்களால் மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் கூண்டு வைத்து தொடர்ச்சியாக 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன. இருப்பினும் மலைப்பாதையில் பக்தர்கள் கூட்டமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களிடம் மூங்கில் கம்பும் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டது.
மேலும் பல கட்டுப்பாடுகளுடன் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மலைப்பாதையில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்களின் பாதுகாப்புக்கு மாற்றுவழி குறித்து திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (wildlife Institute of India) விலங்குகள் ஆராய்ச்சியாளர் ரமேஷ் தலைமையில் நிபுணர் குழுவினர் நேற்று திருப்பதி வந்தனர். அவர்கள் திருப்பதி அலிபிரி நடைபாதையில் லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் வரை நடந்து சென்று ஆய்வு செய்தனர். குறிப்பாக சிறுவன் மற்றும் சிறுமி தாக்கப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். அதேபோல் 6 சிறுத்தைகள் பிடிபட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தனர். பக்தர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மலைப்பாதையை கடந்து செல்வதற்கான திட்டங்கள், தாழ்வுபாலம் அல்லது மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று 2வது நாளாக மற்றொரு மலைப்பாதையான சந்திரகிரி வாரிமிட்டா பகுதியில் டேராடூன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், அலிபிரி மற்றும் வாரிமிட்டா மலைப்பாதையில் இருந்து திருமலை வருவதற்கு கான்கிரீட் உயர் ேமம்பாலம் அமைக்கலாமா? அல்லது வனவிலங்குகள் நடைபாதைக்குள் வராமல் அதன் மேற்புறத்தில் நடந்துசெல்லும் வகையில் வழித்தடம் அமைக்கலாமா? என டேராடூன் அதிகாரிகள் விவாதித்தனர். இதுதொடர்பாக அவர்கள் சில நாட்களுக்குள் விவாதித்து உரிய வரைபடத்துடன் திருப்பதி தேவஸ்தானத்திடம் அறிக்கை வழங்குவார்கள். குறிப்பாக அந்த அதிகாரிகள் 3 திட்டங்களை வைத்துள்ளனர். இவற்றுக்கு மத்திய வனத்துறை அனுமதி அளித்தால் மட்டுமே சாத்தியம். பக்தர்களின் பாதுகாப்புக்காக அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.