* விக்ரம் லேண்டர் வரும் 23ம் தேதி நிலவில் தரை இறக்கப்படும்.
* தரை இறங்கும் போது நிலவுக்கு நெருக்கமாக 30 கிமீ தொலைவில் லேண்டர் சுற்றிக் கொண்டிருக்கும்.
* நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்க எடுத்துக் கொள்ளும் நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே. இதுவே இத்திட்டத்தில் மிக முக்கியமான கட்டம்.
சென்னை: சந்திரயான்-3 திட்டம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, நிலவில் தரையிறங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் பல்வேறு பகுதிகளில் பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி மேற்கொண்டது இல்லை. இந்தியா மட்டுமே நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் திட்டத்தை கையிலெடுத்து சந்திராயன் திட்டத்தை தொடங்கியது. இந்தியா, முதல் முறையாக கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
சந்திரயான் -1 விண்கலம் நிலவின் சுற்றுபாதையில் வலம் வந்து ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்தது. பின்னர் சந்திரயான்-2 திட்டத்தில் நிலவின் பரப்பில் கருவிகளை இறக்கி ஆய்வுகளை செய்ய திட்டமிட்டது. இதன்படி, கடந்த 2019 சந்திரயான்- 2 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் சந்திரயான்-2வில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் சரியாக தரையிறங்காமல் சந்திரன் நிலப்பகுதியில் மோதியதால் திட்டம் தோல்வியில் முடிந்தது. கடந்த முறை அடைந்த தோல்வியில் இருந்து பல்வேறு ஆய்வுகளின் மூலம் பாடங்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கற்றனர். பின்னர், சந்திராயன்-2 தரவுகளை வைத்து தீவிரமாக ஆய்வு செய்தனர். இம்முறை தவறுகளை திருத்திக்கொண்டு சரியாக நிலவில் லேண்டர் கருவியை தரையிறக்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் எல்எம்வி3, எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சரியாக 17வது நிமிடத்தில் சந்திரயான்- 3 செயற்கோள் புவிவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது 40 நாள் பயணத்தில் முதல் கட்டமாக, விண்கலம் புவி சுற்றுவட்டபாதையில் 17 நாட்கள் பயணித்தது. ஒவ்வொரு கட்டமாக, அடுத்தடுத்த சுற்றுவட்டபாதைக்கு உயர்த்தும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதையடுத்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணிப்பதற்கு ஏற்புடைய சூழல் விண்கலத்தில் ஏற்பட்டதை அடுத்து கடந்த 1ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் புவியின் இறுதி சுற்றுவட்டப்பதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதையை நோக்கி 4 நாட்கள் விண்கலம் பயணித்தது. இந்த நேரத்தில் நிலவை நோக்கிய சந்திரயான் 3-ன் பயணத்தில் மூன்றில் இரு பங்கு தூரத்தை கடந்திருந்து. இதையடுத்து கடந்த 5ம் தேதி லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவின் சுற்றவட்டபாதைக்குள் விண்கலம் நுழைந்தது. அடுத்தக்கட்டமாக நிலவுக்கு அருகே விண்கலத்தை நகர்த்தும் விதமாக படிப்படியாக நிலவின் சுற்றுவட்டபாதையில் சந்திரயான்- 3 விண்கலத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இறுதியாக கடந்த 16ம் தேதி கடைசி சுற்று வட்ட பாதையில் சந்திரயான் -3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 153 கி.மீ., 163கி.மீ. தூரத்திற்கு உயரம் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திரயான் -3ன் உந்துவிசைக் கலனில் இருந்து விக்ரம் லேண்டரை மட்டும் தனியாகப் பிரித்து நிலவை நோக்கி அனுப்புவதற்கான முதல்கட்டப் பணிகள் நேற்று நடைபெற்றது. நேற்று சரியாக மதியம் 1.15மணியளவில் விண்கலத்தின் உந்து விசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. இதையடுத்து தனியாகப் பிரிந்த விக்ரம் லேண்டரும் தன்னுடைய தனிப் பாதையில் நிலவைச் சுற்றத் தொடங்கியது. இதன் பிறகு படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு தரையிறங்குவதற்கான பணிகள் தொடங்கும். இன்னும் ஆறு நாட்களில் அதாவது 23ம் தேதி விக்ரம் லேண்டர் நிலாவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது, நிலவுக்கு நெருக்கமாக 30 கி.மீ. தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கும். வரும் 23ம் தேதி இந்தச் சுற்றுப் பாதையில் இருந்து விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான சிக்னல்களை இஸ்ரோ அனுப்பும். நிலவை நோக்கி விக்ரம் லேண்டர் 100 கி.மீ வேகத்தில் செல்லும். நிலவை நெருங்கியவுடன் அதன் வேகம் 30 கி.மீட்டராக குறைத்து சந்திரனில் இறங்கும். இதன் அடுத்த கட்டம் மற்றும் விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் விஷயம், விக்ரம் லேண்டரை நிலவின் பரப்பில் மென்மையாக இறக்குவது. இம்முறை மென்மையான தரையிறக்கம் செய்ய சந்திரயான்-2 லிருந்து சந்திரயான்-3ல் உள்ள தரையிறக்கும் பகுதியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.