சென்னை: ‘‘அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்’’ என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம்முடைய பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முறையாக செயல்படுத்துவது தொடர்பாக உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘எண்ணும் எழுத்தும்’ திட்டமானது ஆரம்பக் கல்விக்கான ஒரு புதுமையான முன்னோடி அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. 

இது, குழந்தைகள் தங்களின் கற்றல் செயல்பாட்டில் ஈடுபாட்டோடு பங்கேற்கும் விதமாக செயலாக்கம் மிக்க இடங்களாக வகுப்பறைகளை மாற்றும் நோக்கத்தைக் கொண்டது. வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் மரபான வழக்கமாக இது இருக்காது. அனுபவ ரீதியான கற்றலையும், சுய கண்டறிதல்களையும், சக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கற்பதையும் இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது. இது அச்சுறுத்தலற்ற மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துகிறது. ஜனநாயக ரீதியான, எல்லோரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கிறது. அதேபோல இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

அதன்படி ஆய்வு மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட சில அம்சங்களை கவனிக்க வேண்டும் அவை பின்வருமாறு: 
* கற்றல் நிலை: தங்கள் கற்றல் நிலைக்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ‘அரும்பு’, ‘மொட்டு’, ‘மலர்’ ஆகிய ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்ற அறிவுறுத்தல்களை குழந்தைகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். 
* செயல்பாடுகள்: ஆசிரியர்களின் கையேடு மற்றும் செயல்முறைப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபடுவதை உறுதிப்படுத்தவும். 
* மகிழ்ச்சி மற்றும் மன அழுத்த நிலைகள்: வகுப்பறை சூழலில் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தமின்றியும் இருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். 
* சிறப்பு பகுதிகள்: படைப்பாற்றலையும் திறமையையும் ஊக்குவிக்க கதை, பாடல், செயல்பாடுகள், கலை மற்றும் கைவினை, வாசிப்பு பகுதிகள் முறையாக பயன்படுத்தப்படுவதை சரிபார்க்க வேண்டும். 
* உட்கட்டமைப்பும் வசதிகளும்: முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை மதிப்பிடவும். சுற்றுப்புறத் தூய்மையையும் கழிப்பறைகள், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உறுதிசெய்ய வேண்டும். அந்தவகையில், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதன் மூலம் நம் மாணவர்களின் நலனை மேம்படுத்த முடியும். மேலும், இதுபோன்ற ஆய்வுகளுக்காக நீங்கள் பள்ளி பார்வை செயலியை பயன்படுத்தலாம். பள்ளிக் கல்வி துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும் முதன்மை கல்வி அலுவலர் முதல் வட்டார கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வுசெய்வதையும், வகுப்பறைகளைக் கண்காணிப்பதையும் பள்ளிப் பார்வை செயலி மூலம் நீங்கள் உறுதிசெய்யலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram