
சென்னை: நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என்று அமலாக்கத்துறை கேட்டதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக செந்தில்பாலாஜியின் வக்கீல் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, செந்தில் பாலாஜிக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து விசாரணையும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. வேலைக்காக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை தவிர வேறு ஒருவரையும் குற்றவாளியாக சேர்க்கவில்லை. அவர்களை சாட்சியாக கூட சேர்க்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட இந்த வழக்கில் அமைச்சர் குறிவைக்கப்பட்டுள்ளார்.
அவரை அமலாக்கத்துறை காவலில் விசாரித்தபோது, ‘‘நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது’’ என்று கேட்டுள்ளனர். இதிலிருந்தே அரசியல் உள்நோக்கத்துடன்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிகிறது. செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல் நிலையின்படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர் கொள்வார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிடும்போது, செந்தில் பாலாஜி குற்றம் செய்தாரா, இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி எங்கும் தப்பி செல்லமாட்டார். வேண்டுமென்றால் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம் என்று வாதிட்டார்.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த ஜாமீன் மனு மீது வரும் 20ம் தேதி தீர்ப்பளிப்பதாக தெரிவித்தார்.
* நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். கைதான நாளிலிருந்து நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் 5வதாக முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.