குலத்தொழிலை ஒன்றிய அரசு ஊக்குவிப்பதாக முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.பிரதமர் மோடி அறிவித்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் உள்ளடக்கம்வே சனாதனம் தான் என்றும் தந்தை தொழிலை மகன் தொடர வேண்டும் என்பதே சனாதனம் என்றும் முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி தலையங்கத்தில் வெளியான கட்டுரை:
சனாதனம் என்றால் என்ன என்று பரப்புரை செய்ய ஒன்றிய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அவர் அறிவித்துள்ள ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் உள்ளடக்கமே சனாதனம்தான். தந்தை தொழிலை மகன் தொடர வேண்டும் என்பதே சனாதனம். குலத் தொழிலை எவரும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான் சனாதனம். அதற்காகவே ஒரு திட்டம் போடுகிறார் பிரதமர்.
ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றிவிட்டு பிரதமர் பேசும் போது குலத்தொழி லைச் செய்பவர்கள் தங்களது குடும்பத் தொழிலைத் தொடர்ந்து செய்தால் நிதி கொடுப்போம் என்று அறிவித்தார். இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்புதான் இது.
விஸ்வகர்மா யோஜனா -– என்ற திட்டம் 18 வகையான ஜாதிகளை அடையாளம் காட்டுகிறது. அவர்களது பரம்பரைத் தொழிலுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலமாக குலத் தொழிலை ஊக்குவிக்கிறது. பரம்பரையாக தொழில் செய்பவர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் இது.
பரம்பரைத் தொழில்களைச் செய்பவர்கள் என்றால் அனைத்துத் தொழில் களையும் சொல்லாமல் 18 தொழில்கள் மட்டும் என வரையறுத்தது ஏன்?
இந்தத் திட்டத்தில் சேர்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அந்தத் தொழிலை செய்பவர்களாக இருக்க வேண்டும். செருப்பு தைப்பவர் பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன் என சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இந்தத் தொழிலாளி ஒருவர் தனது தொழிலை விரிவுப்படுத்தி, வேறு ஒரு பொருளை தயாரித்தால் அவருக்கு நிதி உதவி கிடையாது. பி.எம்.விஸ்வகர்மா என்ற திட்டத்தை 16.8.2023 அன்று அமைச்சரவையின் பொருளாதாரக் குழு ஏற்று 13 ஆயிரம் கோடி பணத்தையும் ஒதுக்கி இருக்கிறது. 2023 முதல் 2028 முதல் குலத் தொழில் செய்ய வாரிசுகளுக்கு அவர்களது குடும்பத்தினர் கற்றுக் கொடுப்பார்களாம்.
பதினெட்டு பரம்பரைத் தொழில்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
1. தச்சர், 2. படகு தயாரிப்பாளர், 3. கவசம் தயாரிப்பவர்
4. கொல்லர், 5. சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்
6. பூட்டு தயாரிப்பவர், 7. பொற்கொல்லர், 8. குயவர்
9. சிற்பி, 10.காலணி தயாரிப்பவர், 11. கொத்தனார்
12. கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர்
13. பொம்மை தயாரிப்பவர், 14. முடி திருத்துபவர்
15. பூமாலை தொடுப்பவர், 16. சலவைத் தொழிலாளர்
17. தையலர், 18. மீன்பிடி வலை தயாரிப்பவர்
இதனை செய்யப் பழகுவோருக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை மானியத்தில் கடன் கிடைக்கும்.
தச்சன் மகன் தச்சுத் தொழிலைத்தான் செய்ய வேண்டும்– – சலவைத் தொழிலாளி மகன் சலவைத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் – முடிதிருத் தும் தொழிலாளி மகன் வாழ்க்கை முழுக்க முடிவெட்டத்தான் வேண்டும் –- என்பதை ஊக்குவிக்கிறார் பிரதமர். அதற்குத்தான் இந்தத் திட்டம். அவரவர்க்கு விதிக்கப்பட்ட தொழிலை மட்டுமே அவரவர் செய்ய வேண்டும் என்பதுதான் மனுவின் கட்டளை. அதுதான் சனாதன தர்மம். அதை மீறக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார் பிரதமர்.
அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி இதனைக்கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இக்கூட்டத்தின் முடிவுப்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்துள்ளது.