திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு. இதுதான் திமுக அரசின் லட்சணம் என சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக தொழிற்சங்க உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. அதிமுகவில் இணைந்த கட்டுமான தொழிலாளர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் கட்சியாக திமுக உள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சேர்ப்பதாகத் தெரிவித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் கம்பி, ஜல்லி, எம்.சாண்ட், செங்கல் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கண்டுகொள்ளாத அரசாக திமுக உள்ளது. கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வால் பல்வேறு கட்டடங்கள் பாதியில் நிற்கின்றன. புதிய கட்டடங்கள் வராமல் உள்ளது.