சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த கூடிய வகையிலே அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
காலை உணவு போடுறதால, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழியுதுனு ஒரு பேப்பர்ல செய்தி போடுகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனே டிவிட்டரில் ஒரு பதிவு போட்டார், நிலாவுக்கு சந்திராயன் விடுகிற இந்த காலத்திலேயே சனாதனம் இப்படி செய்தி போடுதுனா, 100 ஆண்டுகளுக்கு முன்ன என்ன ஆட்டம் ஆடியிருக்கும்னு கேட்டார்.
மக்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றுது. ஆனா, ஒன்றிய அரசு நம்ம மக்களை பின்னாடி தள்ள பார்க்குது. மணிப்பூர் மாநிலத்தை எடுத்துக்கங்க. பாஜ ஆளுகிற மாநிலம் அது. சொந்த மக்களை இரண்டு குழுக்களா பிரிச்சு கலவரத்தை மூட்டிவிட்டிருக்காங்க. இது தான் சனாதனம். ஆனா, அங்கே பயிற்சி பெற முடியாத விளையாட்டு வீரர்கள் 16 பேரை தமிழ்நாட்டுக்கு அழைச்சுட்டு வந்து, உணவு தங்கும் வசதி எல்லாம் கொடுத்து பயிற்சி கொடுத்துட்டு இருக்கோம். இது தான் திராவிடம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பையிலே நடந்த இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலே கலந்துக்கிட்டு இப்ப தான் திரும்பி இருக்கிறார். சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே, நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலே அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் வெல்வோம் என்று உறுதி எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.