சென்னை: 2019 அதிமுக ஆட்சியில் மங்களூர்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை, தடுப்பு வேலி அமைப்பதில் ரூ.1.11 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த, விஜிலென்ஸ் போலீசார் 6 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மங்களூர்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் முதல் அடுக்கம்பாறை வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதை மற்றும் தடுப்பு வேலி அமைக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் கடந்த 2019-2021 வரை நடந்தது. 

அப்போது, கோட்ட பொறியாளராக இருந்த பழனிசாமி, உதவி கோட்ட பொறியாளர் தியாகு, உதவி பொறியாளர் வேதவள்ளி ஆகியோர் சரிவர ஆய்வு செய்யாமல், முடிக்காத பணிக்கு, ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வேலூர் விஜிலென்ஸ் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். இதில் ரூ.1.11 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே பழனிசாமி கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 

 
இதையடுத்து, வேலூர் விஜிலென்ஸ் போலீசார், ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி, உதவி கோட்ட பொறியாளர் தியாகு, உதவி பொறியாளர் வேதவள்ளி, மற்றும் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், பாகாயம் முதல் அடுக்கம்பாறை வரை சாலையின் இருபுறமும் நடைபாதையில் 2.1 மீட்டருக்கு டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு பதில் 0.90 மீட்டர் அகலத்திற்கு டைல்ஸ் கற்கள் பதித்து, ரூ.67 லட்சத்து 58 ஆயிரத்து 442 அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். 

மேலும் நடைபாதையில் குறைந்த அளவிலான இரும்பு கம்பி அமைத்து, ரூ.43 லட்சத்து 45 ஆயிரத்து 88 என மொத்தம் ரூ.1 கோடியே 11 லட்சத்து 3 ஆயிரத்து 530 மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விஜிலென்ஸ் போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் 2 இடம், விருதுநகர், திருவண்ணாமலையில் 2 இடம், மதுரை ஆகிய 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விஜிலென்ஸ் போலீசார் தெரிவித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram