புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு பிரதமர் மோடியின் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல் 14 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவி சுழற்சி முறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்தியா வசம் வந்தது. இதை தொடர்ந்து கடந்த ஒருவருடமாக இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் ஜி20 மாநாடு தொடர்பான பல்வேறு கருத்தரங்குகள் நடந்தன.
இதில் ஜி 20 குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த நாடுகளில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர். இதுவரை அனைத்து மாநாடுகளில் தவறாது பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் இந்தியாவில் நடக்கும் மாநாட்டை புறக்கணித்து விட்டனர். உக்ரைன் போர் குற்றம் காரணமாக ரஷ்ய அதிபர் புடின் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இந்தியா வந்தார். அதிபர் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அவர் இந்தியா வந்துள்ளார். அவரது மனைவி ஜில் பைடனும் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அவரது பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. டெல்லி விமான நிலையம் வந்த ஜோ பைடனை ஒன்றிய இணை அமைச்சர் விகே சிங் தலைமையிலான இந்திய குழுவினர் வரவேற்றனர். விமான நிலையத்தில் ஜோ பைடனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி வந்தடைந்த ஜோ பைடன், பிரதமர் மோடியை சந்திக்க அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு சென்றார். ஜோ பைடனை வாசலுக்கே வந்து கட்டியணைத்து பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நேற்று முதன்முதலாக மொரிஷியஸ் நாட்டு பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்துடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா அவர் சந்தித்தார். இதே போல் பிரதமர் மோடி மொத்தம் 15 நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளார். இன்று ஜி 20 நிகழ்வுகளில் பங்கேற்பதோடு, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். நாளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் மதிய உணவு சந்திப்பை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கனடா, கொமோராஸ், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட், தென்கொரியா, பிரேசில், நைஜீரியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்ட இந்தியா வம்சாவளி ரிஷி சுனக் அவரது மனைவி அக்சதா மூர்த்தியுடன் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி சவ்பே வரவேற்றார். அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸை ஒன்றிய அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே வரவேற்றார். ரஷ்ய அதிபர் புடின் சார்பில் வந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போல் அனைத்து நாடுகளில் தலைவர்களுக்கும் டெல்லி விமான நிலையத்தில் இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.