நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி 10வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுகிறார். கடந்த 9 ஆண்டுகளில் அவர் மேக் இன் இந்தியா முதல் அம்ரித் மஹோத்சவ் வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் முடிந்து விட்டன. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளை படிப்படியாக பட்டியலிட்டு பிரதமர் மோடி இன்று உரையாற்றப்போகிறார். வரும் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மிக முக்கியமான அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார்.
2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த முதலாம் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி தன்னை ஒரு பிரதான சேவகர் அதாவது தலைமை சேவகர் என்று அறிவித்தார். ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை குறிப்பிட்டார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.
2015ஆம் ஆண்டு “ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா” என்ற முழக்கத்தை முன் வைத்தார். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கொள்கையில் ஒப்புதல் உள்ளிட்ட அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை அவர் எடுத்துரைத்தார். ஜன்தன் யோஜனா முன்னேற்றம், கறுப்புப் பணம், ஊழல் ஒழிப்பு ஆகியவை குறித்து பேசினார். 2016 ஆம் ஆண்டு மோடி தனது மூன்றாவது சுதந்திர தின உரையில் பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்களை கடுமையாக கண்டித்தார். இது ஒரு அரசியல் சதி என்று கூறப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கவனத்தை செலுத்துவதற்கான பதிலடியாக இது பார்க்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு மற்றும் புர்ஹான் வானி போன்ற பயங்கரவாதிகளை கொச்சைப்படுத்துவதையும் பிரதமர் விமர்சித்தார். 2017 ஆம் ஆண்டு நாடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டுகளையும், சம்பாரன் சத்தியாகிரகத்தின் 100வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் வேளையில், ‘புதிய இந்தியாவை’ உருவாக்க இந்தியர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகள், 2017 முதல் 2022 வரை நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது என்று மோடி கூறினார்.