
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உள்நோக்கத்துடன் சில சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை தீவிரமாக கண்காணித்து முழுமையாக தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக கலெக்டர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு 3 நாட்கள் நடந்தது.
இதையடுத்து 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வனத்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடந்தது. நேற்று காலையில் நடந்த கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டபோதும் மாவட்ட ஆட்சியர்களை, காவல் துறை கண்காணிப்பாளர்களை சந்தித்து இருக்கிறேன்.
தொடர்ச்சியாக உங்களை சந்தித்து வருகிறேன். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், நாம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கிறோம். இங்கே கூடியுள்ள நீங்கள் அனைவரும் அரசுக்கு உங்களது ஆலோசனைகளை எந்தவித தயக்கமுமின்றி, மக்கள் நலன் ஒன்றையே மையமாக கொண்டு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்தி காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது, பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இது நம் எதிர்கால தலைமுறையையே சீரழிக்கிறது. இது சம்பந்தமான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முழுமையாக ஈடுபட வேண்டும்.